fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கொரோனாவுக்கு சிகிச்சை..! தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு!

Tn government fixes corona fees

சென்னை:

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் ஆரம்பகட்ட பரிசோதனையில் தொடங்கி, நோய்  குணமாகும்  வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்று சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயித்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழக அரசு கொரோனா நோய்தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 03.06.2020 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு  திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றிற்கு கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஆணை வெளியிடப்பட்டது.

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளை அணுகும் நோயாளிகள், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனைத் தவிர, இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் கொரோனா நோய் தொற்று கண்ட நோயாளிகளுக்கு தனியார்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர்.

இதனைத் தொடார்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தலைமையில்  அமைக்கப்பட்ட குழு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிடமிருந்து பெற அனுமதிக்கப்பட வேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்த அறிக்கையினை அரசிடம் அளித்தது.

இவ்வறிக்கையை  கவனமுடன் ஆய்வு செய்த அரசு, மக்கள் நலன் கருதி கீழ்காணும் கட்டணங்களை நிர்ணயிக்கவும் சில நிபந்தனைகளை விதிக்கவும் உத்தேசித்து அவ்வாறே ஆணையிடுகிறது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டண விபரங்கள்:

Grade- A1 மற்றும் A2-யில்  (பொது வார்டு) அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக  ரூ.7,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Grade – A3 மற்றும் A4 அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Grade- A1 மற்றும் A2,  Grade – A3 மற்றும் A4- யில் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) உள்ளவருக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.15,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இக்கட்டணங்கள் அதிகபட்ச கட்டணமாகும். இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க கூடாது. கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு  மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளின் மூலம் கொரோனா சிகிச்சை முறைகள் மேலும் வலுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close