புதுச்சேரியிலும் ஆளுநர்-முதல்வர் அதிகார மோதல் வெடித்துள்ளது
புதுடெல்லியை தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிகார மோதல் கவர்னர்-முதல்வருக்கிடையே வெடித்துள்ளது. இருவரும் தங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று அறிவித்துள்ளனர். இதனால் பெரும் குழப்பம் வெடித்துள்ளது . புதுச்சேரியில் தேர்வு செய்யப்பட்ட அரசு முடிவுகளில் குறிக்கிடுதல், தன்னிச்சையாக உத்தரவிடுதல், அரசு துறைகளில் ஆய்வு மேற்கொள்ளுதல், மக்கள் நலத்திட்டங்களை முடக்குதல் என முதல்வருக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நேரடி மோதல் நிலவி வந்தது. இதேபோன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலும் அதிகாரம் தொடர்பாக அடிக்கடி மோதிக்கொண்டனர். யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டெல்லி அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடந்து வந்தது. இதில் துணைநிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக அதிகாரம் இல்லை. அரசுடன் இணைந்தே செயல்பட வேண்டும்.மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்றும் நீதிபதிகள் கூறினர். ஆனாலும், இந்ததீர்ப்பினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றுள்ளார். மக்களாட்சி தத்துவம் காப்பாற்றப்பட்டு இருப்பதாகவும், இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் தனது டிவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், நிருபர்களிடம் அவர் கூறும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் என்றும் தீர்ப்பை மதித்து கவர்னர் நடந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.இதற்கிடையில் புதுச்சேரியில் அனைத்து துறை செயலர், இயக்குனர்களை தனது அலுவலகத்துக்கு அழைத்தது மட்டுமின்றி ஒவ்வொரு துறைக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்யும் நடவடிக்கையில் கவர்னர் கிரண்பேடி நேற்று மாலையிலும் மற்றும் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகிறார்.