நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடரில் கலக்கும் முக்கிய விவகாரங்கள்….
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்த
மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். குறிப்பாக, ஆபரேஷன் சிந்துர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க ரெடியாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தக் கூட்டத்தொடரில் 17 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.ஜூலை மாதம் நமது நாட்டில் எப்போதும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்கும். இந்தாண்டு நாளை அதாவது ஜூலை 21ம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தாண்டு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிப்பது உள்ளிட்ட சில முக்கிய சட்ட மசோதாக்களைக் கொண்டு வரலாம் எனச் சொல்லப்படுகிறது.ஏற்கனவே நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய விவகாரம் குறித்து காங்கிரஸ் கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து இந்தியா கூட்டணிக் கட்சிகளுடனும் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்களை இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. நாளை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மத்திய அரசு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய கிரன் ரிஜிஜு, நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாடாளுமன்றத்தைச் சுமுகமாக நடத்துவதில் ஒருங்கிணைப்பு
அவசியம்” என்று அவர் கூறினார்.இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள்நாடாளுமன்றத்தில்எழுப்பத்திட்டமிட்டுள்ளது குறித்துக் கேட்டபோது, வெளிப்படையான பதிலை அவர் கூறவில்லை.. மாறாக இந்த விவகாரத்திற்கு மத்திய அரசு கூட்டத்தொடரில் தகுந்த பதிலளிக்கும் என்று மட்டும் பதிலளித்தார். 17 மசோதாக்கள் மேலும், நாடாளுமன்றத்தில் முக்கிய விவகாரங்கள் எழும்போதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இருப்பதாகவும், ஆக்கப்பூர்வமான விவாதம் அவசியம் என்றும் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார். மழைக்காலக் கூட்டத்தொடரில் 17 மசோதாக்களை அரசு தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும், விவாதங்களின்போது அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், விதிகள் மற்றும் நாடாளுமன்ற மரபுகளை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 51 அரசியல் கட்சிகள் பங்கேற்றன. அனைத்துத் தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். வழக்கமாக மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 14ம் தேதி வரை மட்டுமே நடக்கும். ஆனால், இந்த முறை கூடுதலாக ஒரு வாரம் அதாவது ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.