பிரியங்கா வெற்றி பெறுவாரா….?
வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று ( நவம்பர்
23) காலை தொடங்கியிருக்கிறது. இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் ஜவஹர்லால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகப் பார்க்கப்படுகிறது.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்.பி பதவியைத் தக்க வைத்துக் கொண்டு, வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் களத்தில் முதல் முறையாக வேட்பாளராகப் பிரியங்கா காந்தியைக் களத்தில் இறக்கியது காங்கிரஸ். இவரை எதிர்த்து ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி
சார்பில் சத்யன் மொகேரி களத்தில் இறக்கப்பட்டார். பா.ஜ.க தரப்பில் நவ்யா ஹரிதாஸ் களத்தில் இருக்கிறார்.மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பிரியங்கா காந்தி முன்னிலை பெறுவார் என்ற நிலையில் , இரண்டாம் இடத்தைப் பிடிக்கப் போவது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியா அல்லது பா.ஜ.க-வா என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.இது குறித்துத் தெரிவித்த கேரள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், “முதல் முறையாக வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கும் பிரியங்கா காந்தியை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற இலக்கில் தேர்தல் பணிகளைச் செய்தோம். வாக்குப்பதிவு சதவிகிதம் எதிர்பாராத வகையில் குறைந்தது. 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்புகிறோம்” என்றனர்.