செங்குன்றம் புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு….
செங்குன்றம், ஆகஸ்ட் 08:
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சி ஜி.என்.டி. சாலையில் அமைந்திருந்த பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு சுமார் 3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டும் பணி கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.இப்பணி முடியும் தருவாயில் இருப்பதால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச.கவிதா நேரில் வருகை தந்து ஆய்வு செய்தார்.விரைவில் திறக்கப்படவுள்ள பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்படுத்தும் விதத்தில் உள்ளதா, பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்கான வசதிகள், நேரக்கட்டுப்பாட்டு அறைகள், ஓட்டுநர், நடத்துநர்கள் ஓய்வு நேரத்தில் பயன்படுத்தும் அறைகள் மற்றும் வணிகத்திற்காக கட்டப்பட்டுள்ள கடைகளையும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு முன்பு வைக்கப்பட்டுள்ள பழ, பூக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து செங்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளையும், அதன் பொருள்களையும் காவல்துறையினர் ஒத்துழைப்புடன் உடனடியாக அகற்றினார்.ஆய்வின் போது செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர், பொன்னேரி வட்டாட்சியர் ஜெய்கர்பிரபு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

