கோடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை -டிடிவி தினகரன்

கோடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கோடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக தான் நடத்திய புலனாய்வு குறித்த ஆவணப்படத்தை தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் வெளியிட்டு உள்ளார். அதில் கோடநாடு கொலை, கொள்ளையில் நடந்தது என்ன என்பது குறித்து டெல்லியில் செய்தியாளர் மேத்யூஸ் விளக்கம் அளித்து உள்ளார்.

அப்போது முதல்வர் எடப்படி பழனிசாமி குறித்தும் அவர் குற்றஞ்சாட்டினார். கொலை தொடர்பாக வெளியிட்ட ஆவணங்களை கொண்டு விசாரணை நடத்த தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனை மறுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, கோடநாடு சம்பவத்தும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புகின்றனர் என்றார்.
மேலும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கோடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.















