திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்…!
New medical college laying stone in tirupur

சென்னை: திருப்பூரில் அமைய இருக்கும் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், ராமநாதபுரம், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. அதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரி அறிக்கை தாக்கல் செய்தது.
அதன் அடிப்படையில் 9 இடங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க ஒப்புதல் தரப்பட்டது. அதிலும் ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து ரூ1200 கோடி செலவில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது.
தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி அமைக்க வருவாய்த்துறை சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி மார்ச்சில் அடிக்கல் நாட்டத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று, திருப்பூர் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாளை 19ம் தேதி திருவள்ளூர் மருத்துவ கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.















