வடதமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு !

தென்கிழக்கு வங்கக் கடலில் மாலத்தீவையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது என்றும் வரும் 6-ம் தேதி காற்றழுத்த தாழ்வானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 4, 5, 6 ஆகிய தினங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் மேலும் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவிலும் பரவலாக மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
நாளை தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும், நாளை மறுநாள் வடதமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் மீனவர்களுக்கும் எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. 4-ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுவையிலும், 5-ம் தேதி வட தமிழகத்திலும் கனமழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் வட தமிழக பகுதிகளை பொறுத்தவரை பருவமழையானது பிற்பகுதியில் கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.















