கோடநாடு விவகாரம் குறித்து முதல்வரை விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும்…. ஆளுநரிடம் ஸ்டாலின் முறையீடு !

கோடநாடு கொள்ளை மற்றும் கொலைக்கு முதல்வர் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை விசாரிக்க நேர்மையான ஐ.ஜி. தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து மனு கொடுத்தார்.
கோடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக தான் நடத்திய புலனாய்வு குறித்த ஆவணப்படத்தை தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் வெளியிட்டு உள்ளார். அதில் கோடநாடு கொலை, கொள்ளையில் நடந்தது என்ன என்பது குறித்து டெல்லியில் செய்தியாளர் மேத்யூஸ் விளக்கம் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆளுநரை சந்தித்த பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் முகாமாக இருந்து வந்தது கோட நாடு. அங்கு அரசு கோப்புகள் பல இருந்தன. கோடநாடு கொலை சம்பவத்தில் பழனிசாமி குற்றவாளி என்று சொல்லப்படுகிறது. குற்றம் சுமத்திய நபர்களை போலீசார் கைது செய்தனர். ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் மரணம் விபத்துதான் என எஸ்பியை தெரிவிக்க வைக்க முதல்வர் அழுத்தம் கொடுத்துள்ளார். எஞ்சி இருக்கும் ஆதாரங்களை முதல்வர் அழிக்க முயற்சிக்கிறார்.
கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பழனிசாமி தமிழகத்திற்கு அவமானம். சிறப்பான விசாரணை நடக்க வேண்டுமென்றால், முதல்வர் பழனிசாமியை இந்த பொறுப்பில் இருந்து நீக்கி வைக்க வேண்டும். இதனை ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கவர்னரிடம் தெரிவித்துள்ளேன். என்னால் எடுக்கக்கூடிய நடவடிக்கை எடுப்பேன் என கவர்னர் உறுதி அளித்துள்ளார். கோடநாட்டு சம்பவத்தின் பின்புலத்தில் எடப்பாடி பழனிசாமியே உள்ளார்.
ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதியை சந்திப்போம். மேலும் கோர்ட்டையும் அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.















