fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

ஆக்சிஜன் அளவை கண்டறியும் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள்..! முதலமைச்சர் வாங்க உத்தரவு!

CM edapaddi palanisamy order to get pulse oximeter

சென்னை:

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறிய 43 ஆயிரம் ‘பல்ஸ் ஆக்சிமீட்டர் என்ற  கருவிகள் வாங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதித்தவர்களுக்கு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை எளிதாக கண்டறிய 43 ஆயிரம் பல்ஸ் ஆக்சிமீட்டர் என்ற கருவியை வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்துவதற்கு தேவையான மருந்தோ அல்லது தடுப்பூசியோ இல்லாத இன்றைய சூழலில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு குறைவான அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள் கொரோனா பராமரிப்பு மையங்களிலும், மிதமான அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகள் கொரோனா நல மையங்களிலும், தீவிர தொற்று அறிகுறிகளுடன் உள்ள நபர்கள் கொரோனா மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை தொடர்ந்து கண்காணிக்கவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், அவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் குறையும் பொழுது மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது.

இதனை தவிர்க்கும் பொருட்டு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட ‘பிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர்‘ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை வெகு எளிதாக அளவிட ஏதுவாக இந்த கருவியை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகத்தின் மூலமாக 43 ஆயிரம் ‘பிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர்‘ கருவிகளை கொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டு, இதுவரை 23 ஆயிரம் கருவிகள் தருவிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள கருவிகள் இன்னும் ஓரிரு நாட்களில் பெறப்படும். தேவையின் அடிப்படையில் இந்த கருவிகள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்.

இந்த கருவி, அறிகுறிகள் இல்லாமல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவினை கண்காணிக்கவும், காய்ச்சல் சிகிச்சை மையங்கள், கொரோனா பராமரிப்பு மையங்கள், கொரோனா நல மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவினை கண்காணிக்கவும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் பணிகள் கொரோனா தொற்று மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவில் குறைக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close