தமிழக நிதி நிலை அறிக்கையில் தென்னரசு இன்று தாக்கல் செய்த தகவல்கள்….
தமிழக நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக முக்கிய தகவல்கள் இடம்பெற்றது. மேலும் சென்னை, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களின் நிலை தொடர்பாகவும் முக்கிய தகவலை கூறினார். அந்த வகையில் சென்னையில் நடைபெற்று வரும் மெட்ர ரயில் திட்டங்களில் மூன்று வழித்தடங்களில், 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தூரத்திற்கான சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் பகுதியை இயக்குவதற்கான ஒழுங்குமுறை அனுமதி இரயில்வே வாரியத்திடமிருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ இரயில் வழித்தடம், வடபழனியில் தற்போதுள்ள மெட்ரோ வழித்தடத்துடன் இணைக்கப்பட உள்ளது. 11 மெட்ரோ நிலையங்களைக் கொண்ட 14.6 கி.மீ. நீளமுள்ள இவ்வழித்தடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.சென்னை விமான நிலையம் முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைந்துள்ள கிளாம்பாக்கம் வரையிலும். கோயம்பேடு முதல் பட்டாபிராம் வழியாக ஆவடி வரையிலும், திருப்பெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலுமான புதிய வழித்தடங்களில் மெட்ரோ இரயில் திட்டங்களை நிறைவேற்றிட மாநில அரசு கொள்கை ரீதியிலான ஒப்புதல் வழங்கி ஒன்றிய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவிக்கு பரிந்துரைத்துள்ளது. ஒன்றிய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவியை எதிர்நோக்கி, மேற்காணும் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல். பயன்பாட்டு அமைப்புகளை மாற்றியமைத்தல் போன்ற ஆரம்பகட்டப் பணிகளை
மேற்கொள்வதற்கான நிர்வாக ஒப்புதலையும் மாநில அரசு வழங்கியுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ இரயில் திட்டங்களை நிறைவேற்ற அவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கைகளுக்கு ஒப்புதல் கோரப்பட்டபோது, அவற்றிற்கு ஒப்புதல் அளிக்காமல், அவற்றை ஒன்றியஅரசுதிருப்பிஅனுப்பியுள்ளது.கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களில் 20 இலட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகையே உள்ளதாகக் குறிப்பிட்டு, இத்திட்ட அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்நகரங்களுக்கு இணையான நாட்டின் பிற நகரங்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலைப் போன்றே, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களையும் மறுபரிசீலனை செய்து, ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.