ராகி, நெற்பயிர்களை தேன்கனிக்கோட்டை பகுதியில் சேதப்படுத்திய யானைகள்..
தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்த இரு யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த கேழ்வரகு (ராகி), நெற்பயிர், தக்காளிச் செடிகளைச் சேதப்படுத்தின. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவை கடந்தசில நாட்களாக தனித்தனியாகவும், கூட்டமாகவும் பிரிந்து, வனத்தைவிட்டு வெளியேறி, வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனஇதேபோல, தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஒட்டர்பாளையம் கிராமத்துக்குள் நுழைந்த இரு யானைகள் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கிரீஸ், ராமகிருஷ்ணா, அனுமந்தப்பா ஆகியோரது தோட்டங்களில் புகுந்து, அங்கு 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ராகி, 1.5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மற்றும் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிச் செடிகளைச் சேதப்படுத்தின. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, “யானைகள் தொடர்ந்து விளை நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.இப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துறையினர் கண்காணித்து, அவை விளை நிலங்களில் நுழையால் தடுக்க, உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.