
சீனாவில் வுஹான் என்ற இடத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் உலகின் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்திவருகின்றது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரசால் இதுவரை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய இந்த கொரோனா வைரஸ் பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வுகாண் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊரடங்கு உத்தரவு முழுமையாக தளர்க்கப்பட்டது.தற்போது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.
சீனாவில் நேற்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாள் 99 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. மார்ச் 5-ஆம் தேதி 143 பேருக்கு கொரோன தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.அதன்பிறகு 6 வாரங்கள் கழித்து நேற்று அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சீனாவில் 82,160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3341பேர் உயிரிழந்துள்ளனர். எனவே சீனாவின் எல்லையில் அதிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் எல்லைக்கு அருகே உள்ள ரஷ்யாவில் இருந்துதான் கொரோனா அதிகம் பரவுவதால் அங்கு எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க சீன அரசு முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகி கட்டுப்படுத்தப்பட்டும் மீண்டும் பரவி வருவது அனைவரிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.