வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை விட சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது. சுற்றுலா வளர்ச்சி உள்ளூர் வணிகர்களுக்கும், சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கும் பயனளித்து வந்தாலும், ஒரு சில சுற்றுலா பயணிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக, வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் உள்ள வாட்டர்பால்ஸ் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் தங்களது வாகனங்களை ஒழுங்கற்ற முறையில் நிறுத்தி, அதிக ஒலி எழுப்பும் வகையில் பாடல்களை ஒலிபரப்பி, சாலையோரங்களில் நடனமாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சிலர் சாலையின் நடுப்பகுதியிலேயே நின்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதுடன், அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு வழிவிடாமல் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி, விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இந்த நிலை மேலும் தீவிரமடைவதாகவும், அவசர மருத்துவ சேவை வாகனங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் போக்குவரத்தும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, வாட்டர்பால்ஸ் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் காவல்துறையினர் நிரந்தர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவோர் மற்றும் விதிமீறி நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வால்பாறை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து ஒழுங்கையும் உறுதி செய்யும் வகையில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.கோவை மாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்பிரகாஷ் D
