பாரம்பரிய ஊடகங்களில் இருக்கும் கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்தப் புது ஊடகங்களினால் பல்வேறு சமூக, கலாச்சாரப் பிரச்னைகள் தோன்றியிருப்பதை மறுக்க முடியாதென்ற போதிலும் அரசின் கவலை அது குறித்தல்ல.
அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம், சமூக ஊடகம் என அனைத்தையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் ‘ஒளிபரப்புச் சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா’ 2023-ம் ஆண்டுகொண்டுவரப்பட்டு, கடும் எதிர்ப்பு காரணமாக அது திரும்பப்பெறப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு, ‘சமூக ஊடகங்களில் அரசுத் திட்டங்களைப் பாராட்டி எழுதினால், காணொலி வெளியிட்டால் ரூ.8 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். அரசை விமர்சிப்பவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கப்படும்’ என்ற வகையில் டிஜிட்டல் மீடியா கொள்கையைக் கொண்டுவந்திருக்கிறது. அதற்கு கடும் விமர்சனமும் எழுந்திருக்கிறது.