விரைவு நீதிமன்றங்களில் நீதிபதிகள் பற்றாக்குறை….?
அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு வழக்குகளை, மூன்று மாதங்களில் முடிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க, மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால், போதிய நீதிபதிகளும், உட்கட்டமைப்பும் இல்லாமல், ஏற்கனவே, 2.45 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் சூழலில், வெறும் அறிவிப்புகளால் மட்டும் விரைவான நீதி கிடைத்து விடுமா என, எதிர்க்கட்சியினரும், சட்ட வல்லுநர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தை கையில் எடுத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, கடந்த 20ல், பார்லி., நோக்கி நடத்திய முற்றுகை பேரணி தேசிய அளவில் கவனம் பெற்றது.தொடர்ந்து, அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவதை தடுக்கும் வகையில், கசிய விடுவோருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையிலும் புதிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, கடந்த வாரம் பார்லி.,யின் இரு சபைகளிலும், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு பின், விரைவில் சட்டமாக உள்ளது.வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க, மாநில அரசுகள் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க, இந்த சட்டம் வழிவகுக்கிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து, இரு மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்கவும், மூன்று மாதங்களுக்குள் நீதிமன்ற விசாரணை நடைமுறைகளை முடிக்கவும் இச்சட்டத்தில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில், சட்டத்தை நிறைவேற்றி சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைத்து விட்டால் மட்டும் போதுமா? அந்த நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடத்தி தீர்ப்பு வழங்க நீதிபதிகளை நியமிக்க வேண்டாமா? அதற்கேற்றவாறு, போதிய நீதிபதிகள் இருக்கின்றனரா? என, சட்ட வல்லுநர்களும், எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.குறிப்பாக, லோக்சபாவில் இம்மசோதா விவாதத்திற்கு வந்தபோது காங்., – எம்.பி., சசி தரூர், அரசு புள்ளிவிபரங்களை சுட்டிக்காட்டி அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். அவர் கூறுகையில், ‘வெறும் சட்டங்கள் இயற்றி
விட்டால் மட்டும், வழக்குகள் விரைவாக முடிந்து விடாது. போதிய நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், தடயவியல் வசதிகள், நீதிமன்ற உட்கட்டமைப்புகள் தேவை.’கடந்த 2025ல் மட்டும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களில், 1.44 லட்சம் புதிய வழக்குகள் பதிவாகி இருந்தன. அதில், 66,500 வழக்குகள் மட்டுமே முடித்து வைக்கப்பட்டன. தற்போது விரைவு நீதிமன்றங்களில் மட்டும், 2.46 லட்சம் வழக்குகள் முடிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன’ என்றார். விரைவு நீதிமன்றங்களின் செயல்பாடு குறித்து, சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் உதாரணமாக சுட்டிக்காட்டினார்.நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதான தினேஷ் பிவால், விகாஷ் பிவால் இருவரின் ஜாமின் மனுக்கள், கடந்த மாதம் 27ல் சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. ஆனால், சி.பி.ஐ., தரப்பில் யாரும் ஆஜராகாததால், வழக்கை நாளைக்கு நீதிபதி அனு குரோவர் பலிகா ஒத்திவைக்க நேர்ந்தது.’சி.பி.ஐ., வழக்கை நடத்துவதில் தீவிரம் காட்டாத போது, விரைவு நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காண்போம் என, பிரதமர் மோடி எப்படி மார்தட்டி கொள்ள முடியும்?’ என, ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.நாடு முழுதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் தற்போது, 4.8 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றில், 74 சதவீதம்
குற்றவியல் வழக்குகள். புதிய நீதிபதிகளை நியமிக்காமல், ஏற்கனவே உள்ள நீதிபதிகளை சிறப்பு நீதிமன்றங்களுக்கு நியமிப்பதால், மற்ற சாதாரண வழக்குகள் தேங்கும் நிலைஉருவாகுகிறது. உட்கட்டமைப்பு இல்லாதது, நீதிபதிகள் பற்றாக்குறை போன்ற அடிப்படை பிரச்னைகள் இருக்கும் பட்சத்தில், விரைவு நீதிமன்றங்களை அமைப்பதால் மட்டுமே, எதுவும் நடந்து விடப் போவதில்லை என, எதிர்க்கட்சிகள் குமுறுகின்றன.