fbpx
RETamil News

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேரை இழுக்க பா.ஜ.க முயற்சி!

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் மந்திரி பதவி கிடைக்காததால் அடிக்கடி போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இதனால் கூட்டணி ஆட்சிக்கு அவ்வப்போது நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்தி, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 12 பேரை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதாவது ரமேஷ் ஜார்கிகோளி, சங்கர் ஆகிய 2 பேர் மந்திரிசபையில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் 8 மந்திரிகள் புதிதாக பதவி ஏற்றனர். கா்நாடக மந்திரி சபையை விரிவாக்கம் செய்த மறுநாளே, கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகின்றனர்.

மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரதாப்கவுடா, ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங், நாகேந்திரா உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுயேச்சை எம்.எல்.ஏ. சங்கரும் அதிருப்தியில் உள்ளார். அவர்களை இழுக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்யும்படி கர்நாடக தலைவர்களுக்கு அக்கட்சியின் மேலிடம் ரகசிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜ.க தலைவர்கள் சத்தம் இல்லாமல் இறங்கியுள்ளனர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close