fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

கர்நாடகாவில் 5 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்

கர்நாடக மாநில‌த்தில் மண்டியா, ஷிமோகா, பெல்லாரி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜம்கண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தனித்தும், காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன. இன்று காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

ராம்நகர் தொகுதியில் மஜத சார்பில் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா நிறுத்தப்பட்டுள்ளார்.

பாஜக சார்பில் ஷிமோகா, மண்டியா, பெல்லாரி மக்களவைத் தொகுதிகளில் முறையே முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி சித்தராமையா, முன்னாள் எம்.பி. சாந்தா போட்டியிடுகின்றனர். ஜம்கண்டி, ராம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் முறையே ஸ்ரீகாந்த் குல்கர்னி, சந்திர சேகர் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மஜத சார்பில் மண்டியா, ஷிமோகா மக்களவைத் தொகுதிகளில் முறையே சிவராம கவுடாவும், முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பாவும் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் சார்பில் பெல்லாரி மக்களவைத் தொகுதியில் உக்ரப்பாவும், ஜம்கண்டி சட்டப்பேரவை தொகுதியில் ஆன‌ந்த் நியாம கவுடாவும் போட்டியிடுகின்றனர்.

ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர்களான பங்காரப்பா, எடியூரப்பா, ஜே.ஹெச். படேல் ஆகியோரின் மகன்கள் மது பங்காரப்பா (மஜத), ராகவேந்திரா (பாஜக), மது படேல் (ஐக்கிய ஜனதா தளம்) ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். மூன்று முன்னாள் முதல்வர்களின் மகன்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் ஷிமோகாவில் தேர்தல் களம் அனல் பறந்தது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close