fbpx
RETamil NewsTechnologyஅரசியல்இந்தியா

ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல்-மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு!

மத்திய மந்திரி சபை கூட்டத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், விண்வெளிக்கு 3 இந்திய வீரர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மந்திரசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின உரையின் போது, ககன்யான் திட்டம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த திட்டத்தின் மூலம் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்திருந்தார். இதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஏற்கனவே ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை பெறுவதற்காக ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

மந்திரிசபை கூட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) 3 இந்தியர்களை 7 நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த முதல் முயற்சியை நிதி ஒதுக்கப்பட்ட 40 மாதங்களுக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ககன்யான் திட்டம் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த திட்டத்துக்காக இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.-111 ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. தேவையான அடிப்படை கட்டமைப்பு, விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி, தரை கட்டுப்பாட்டு வசதி போன்றவை உருவாக்கப்படும். இதற்காக 2 ஆளில்லா விமானங்கள், ஒரு ஆட்கள் செல்லும் விமானம் பயன்படுத்தப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்கும் வகையில், போக்சோ சட்டத்தில் திருத்தங்கள் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில் மோசமான பாலியல் குற்றங்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கும் திருத்தத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தின் பிரிவுகள் 4, 5, 6 ஆகியவை மரண தண்டனை உள்பட கடும் தண்டனைகள் வழங்குவதற்கு வகை செய்கிறது. சட்டங்கள் கடுமையாக்கப்படுவதுடன், விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாலியல் ஆபாச காட்சிகளை வெளியிடுதல், விரைவாக பருவ வயதை அடைவதற்காக ஹார்மோன்கள், செயற்கை மருந்துகள் செலுத்துவது ஆகிய குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

2019 ஆண்டு எண்ணெய்க் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 9 ஆயிரத்து 521 ரூபாய் ஆகவும், பந்து கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 9 ஆயிரத்து 920 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு அண்டை விட 2000 ரூபாய் அதிகமாக நிர்ணயிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது விவசாயிகளுக்கு சரியான விலை வழங்கப்படுவதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தென்னை பயிரிடுதலில் முதலீட்டை அதிகரிக்கவும், உற்பத்தியையும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரையின் படி இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறனார்.

Related Articles

Back to top button
Close
Close