fbpx
Others

வால்பாறை–ஆபத்தான நிலையில் செலலிப்பாறை பேருந்து நிழற்குடை..?

வால்பாறை, ஜூன் 14:  கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட செலலிப்பாறை பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள நிழற்குடை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனை உடனடியாக சீரமைக்க நகராட்சி அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செலலிப்பாறை பகுதியில் உள்ள இந்த பேருந்து நிழற்குடை பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி இருந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மழையிலிருந்து தப்பிக்க நிழற்குடையின் கீழ் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், நிழற்குடையின் மேற்கூரைப் பகுதியில் உள்ள சிமெண்டு கான்கிரீட் பகுதிகள் சேதமடைந்து, அவ்வப்போது சிறு சிறு துண்டுகளாக இடிந்து விழுந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அங்கு நிற்கும் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது கான்கிரீட் துண்டுகள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
குறிப்பாக, தினமும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வரும் நிலையில், எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நிகழக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, நிழற்குடையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்..மேலும், வால்பாறை நகராட்சிப் பகுதிகளில் உள்ள பிற பேருந்து நிழற்குடைகள் சீரமைக்கப்பட்டதைப் போல, செலலிப்பாறை நிழற்குடையும் உடனடியாக புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகைப்படம் மற்றும் செய்தி: கோவை மாவட்ட புகைப்படக் கலைஞர் ஜெயப்பிரகாஷ் D

 

Related Articles

Back to top button
Close
Close