முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விசிகவில் இருந்து விலகல்….?
பனையூர் பாபு வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: சமீப காலங்களாக விசிக தலைவர் திருமாவளவனின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்குப் பெரும் வியப்பையும் வேதனையையும் அளிக்கின்றன. ஒரு தெளிவான நிலைப்பாடின்றி, அடிக்கடி தடுமாறுவது அவரது இயல்பல்ல.நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு நிலைப்பாடு, நாளை செய்தியாளர் சந்திப்பில் வேறொரு நிலைப்பாடு, மீண்டும் இரவில் சமூக வலைத்தள நேரலையில் முற்றிலும் முரணான ஒரு நிலைப்பாடு எனத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, அரசியல் களத்திலும் தொண்டர்களிடையேயும் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது.நேற்று வரை ஒரு நடிகரை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பெற்றெடுத்த பிள்ளை என்று கடுமையாக விமர்சித்த அவர், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, அவர் இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கருத்தியலிலும் தடம் மாறத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்துக்குத்தான் செல்ல வேண்டும், சட்டப்பேரவைக்கு வரக் கூடாது. அவர்கள் பெரியாரும், அம்பேத்கரும் பேசிய அரசியலையும், கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர்கள் என்று சூளுரைத்த அவர், இன்று அவர்களுடனே கைகோர்க்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாகும். ஆட்சி அதிகாரங்கள் வரும், போகும்.அது நிலையற்றது. அரசியல் தளத்தில், மக்கள் சித்தாந்தங்களை விடக் கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது என்று அம்பேத்கர் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், இன்று அந்த அபாயகரமான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமோ எனஅஞ்சுகிறேன். .கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ், இனியும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்கிறது.எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.