மறைமலையடிகளின் 150-வது ( july 15 1876 ) பிறந்தநாள் பெருவிழா….
தமிழியக்கத்தின் நிறுவனரும், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமையுரை ஆற்றி பேசியதாவது: தமிழ் மொழியைக் காக்கவும், தமிழ்க் கலப்பை தடுக்கவும் தனித் தமிழ் இயக்கத்தை தொடங்கியவர் மறைமலையடிகள்.குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும் என்று மறைமலையடிகள் தொடர்ந்து வலியுறுத்தினார். தற்போது பெயரை பார்த்து தமிழர்கள் என்று அடையாளம் காண முடியாத சூழல்தான் உள்ளது.ஆனால், ஒரு பிஹாரி, பெங்காலியின் பெயரை வைத்து அவர் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லி விடலாம். குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட தமிழர்கள் முன்வர வேண்டும் தமிழ்தான் நம்மை ஒன்றுசேர்க்கும்.கடந்த 1937-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை மொழிப் பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றினால்தான் மொழிப் பிரச்சினை தீரும். இந்தி மொழி வளர ஆங்கிலத்தை அழிக்க நினைக்கின்றனர். இன்றைய தினம் இந்தியாவின் பல மாநிலங்களில் ஆங்கிலம்தான் ஆட்சிமொழியாக இருந்து வருகிறது.தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்பட்டாலோ, ஆங்கிலம் அந்நிய மொழி என்று சொல்லி வேறொரு மொழியை புகுத்த முயன்றாலோ தனித்தமிழ் இயக்கம் அதற்கு எதிராக போராடு்ம். மொழிப் பிரச்சினையை தீர்க்க மத்திய-மாநில அரசுகள் கலந்து ஆலோசிக்க வேண்டும்.இவ்வாறு விசுவநாதன் பேசினார். பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஆ.ராஜ் மோகன் சிறப்புரை ஆற்றி பேசும்போது, ‘தூய தமிழ்ப்பற்றாளரான மறைமலையடிகளின் புகழும், அவரது தமிழ்ச்சேவையும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும்உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் அறிஞர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து ஏராளமான தமிழ்ப்பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, “21 வயதுக்குள் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை எல்லாம் மனப்பாடம் செய்தவர் மறைமலையடிகள்.தமிழ் இலக்கியத்துக்கு சுவை ஊட்டிய அவர், தமிழர்களை விழிப்படையச் செய்தார் தமிழ் மொழி வேறு, வடமொழி வேறு என்ற கருத்தை 19-ம் நூற்றாண்டில் கூறியவர் கால்டுவெல். இதே கருத்தை 20-ம் நூற்றாண்டில் சொன்னவர் மறைமலையடிகள். தென்னாட்டு நாகரிகம் தனி நாகரிகம். அந்த நாகரிகத்தை பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்” என்று குறிப்பிட்டார்.தமிழியக்கம் செயலாளர் மு.சுகுமார், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற ஒருங்கிணைப்பாளர் மோசஸ் மைக்கேல் பாரடே, ஆகியோர் வாழ்த்திப்பேசினர். முன்னதாக, மறைமலையடிகளின் பேரனும், மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான தாயுமானவன் வரவேற்றார். நிறைவாக, தமிழியக்கம் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் சே.வரலட்சுமி நன்றி கூறினார்.