போதை இல்லாத தமிழ்நாடு வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் வலியுறுத்தல்…
போதை இல்லாத தமிழ்நாடு, இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் – வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் வலியுறுத்தல்
கோவை மாவட்டம் வால்பாறையில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சிவணேசன் முன்னிலை வகித்தார்.பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு வால்பாறை மெயின் ரோடு வழியாக அணிவகுத்துச் சென்றனர். அப்போது மாணவர்கள் “போதைக்கு நாங்கள் அடிமையாக இருக்க மாட்டோம்”, “போதை இல்லா சமுதாயம் உருவாக்குவோம்”, “இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம்” உள்ளிட்ட விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், போதைப்பொருள் பயன்பாடு தனிநபர்களின் உடல்நலத்தையும் மனநலத்தையும் கடுமையாக பாதிப்பதோடு, அவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கிறது என்றார். போதைப்பொருள் பழக்கத்தால் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி உறவினர்கள் மற்றும் சமூகத்தினரும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது என்றும் தெரிவித்தார்.மேலும், இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகாமல் தங்களது கல்வி, திறன் மேம்பாடு மற்றும் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்கள் தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சுற்றியுள்ள மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.“நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் போதை இல்லாத தமிழ்நாட்டையும், போதை இல்லாத இந்தியாவையும் உருவாக்க முடியும்” என்று அவர் வலியுறுத்தினார்.நிகழ்ச்சியின் முடிவில், போதைப்பொருள் ஒழிப்பிற்காக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கோவை மாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்ரகாஷ் D

