ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டுகள் உடன் பிடிபட்ட தீவிரவாதி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கையெறி குண்டுகள் உடன் பேருந்தில் பயணம் செய்த தீவிரவாதி ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டு உள்ளார்.
வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் சுதந்திர தின நாள் நெருங்கி வரும் வேளையில் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தலைநகர் டெல்லியில், கஷ்மீர் தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கொடுத்த தகவலையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள காந்தி நகர் பகுதியில் நேற்று இரவு பேருந்து ஒன்றை போலீசார் வழிமறித்து சோதனையிட்டனர்.
அப்போது காஷ்மீரை சேர்ந்த தீவிரவாதி ஒருவரிடம் எட்டு கையெறி குண்டுகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரை கைது செய்த போலீசார் மற்ற தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா உள்ளிட்ட கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை அடுத்து ஜம்மு மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.