இட ஒதுக்கீட்டை ஒழிக்க பா.ஜ.க வின் பெரும் சதி :திருமாவளவன் பொளேர்!

சென்னை:
விடுதலைச் சிறுத்கைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ,
முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வழி செய்யும் சட்டத் திருத்தத்தை பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ளது.
இது உண்மையில் இடஒதுக்கீடு வழங்கும் நோக்கம் கொண்டதல்ல, ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான மிகப்பெரும் சதித்திட்டம் ஆகும். தேர்தல் ஆதாயத்திற்காக முற்பட்ட வகுப்பினரை ஏமாற்றும் இந்த மோசடி முயற்சியைக் கைவிட வேண்டுமென பா.ஜனதா அரசை வலியுறுத்துகிறோம்.
இடஒதுக்கீடு என்பது வெறும் பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுவதல்ல பலநூறு ஆண்டுகளாக நிலவி வரும் சமூக பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமத்துவ நோக்கில் வழங்கப்படுவதாகும். பா.ஜனதா அரசு நீதித்துறையை மதிக்காதது மட்டுமின்றி இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்பதற்கும் இது ஒரு சான்றாகும்.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு எஸ்.சி. எஸ்.டி., ஓபிசி இடஒதுக்கீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகிறது.
இடஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம் என வெளிப்படையாகக் கூறாமலேயே அதை முடக்கிக் கொண்டிருக்கிறது.
முற்பட்ட வகுப்பினருக்கு உதவுவது போல் பா.ஜனதா அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டதிருத்தம் உண்மையில் அவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது.
பாரதிய ஜனதா தோல்வி பயத்தில் மேற்கொண்டுள்ள இது போன்ற ஏமாற்று நடவடிக்கைக்கு யாரும் ஏமாறமாட்டார்கள்.
இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.















