மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து ஓடினார்…
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு, சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ்’ என்ற கருத்துடன் நேற்று மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்.டது.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த முதல்வர் விஜய், விழிப்புணர்வுப் பலகையில் ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ், ஸ்போர்ட்ஸை எடு, ட்ரக்ஸை விடு’ என்று எழுதி கையெழுத்திட்டார். அவரது தலைமையில் அனைவரும் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதன்பிறகு, மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இருந்து தீவுத்திடல் வரை மாரத்தான் ஓட்டம் தொடங்கியது.முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 கி.மீ. தூரம் நடைபெற்ற ஓட்டத்தில், ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் என 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இவர்களுடன் முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன், மரியவில்சன், ரா.குமார், தலைமைச் செயலர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், விளையாட்டுத் துறை செயலர் சந்தீப்நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாநகராட்சி ஆணையர் சமீரன், மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் உள்ளிட்டோரும் மாரத்தானில் பங்கேற்று ஓடினர். பின்னர், வீரர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.நிகழ்ச்சியின் முடிவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தமிழக வரலாற்றில் வேறு எந்த முதல்வரும் மாரத்தான் ஓடியது இல்லை. முதல்வர் விஜய்தான் முதல்முறையாக 3 கி.மீ. தூரம் வரை மாரத்தான் ஓடியுள்ளார். அவரைப் போலவே தமிழகமும் ஆரோக்கியமாக மாறும்” என்றார்.முதல்வர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:
இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடும் சட்ட நடவடிக்கை கள் மூலமாகவும் போதைப் பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணைநின்று, போதைப் பொருள் இல்லாத, பாதுகாப்பான, ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.