fbpx
Others

இறந்துபோன பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை திருடிய அரசு மருத்துவமனை ஊழியர் கைது !

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாப்பநாயக்கன் பாளையம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள செந்தில்குமாரின் மனைவி செல்வி, அவரது தாயார் உடல்நலம் பாதிப்பால் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் 21 ஆம் தேதி மருத்துவமனையில் இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்வியின் தாயார் கழுத்தில் கிடந்த தங்க காசு உடன் கூடிய 6 கிராம் தாலி மாயமாகி இருந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர். தனது தாயின் தாலி செயின் மாயமானது குறித்து செல்வி ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் பிரபுதாஸ் அரசு மருத்துவமனையின் ஐ.சி.யூ பிரிவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் மூலம் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வரும் செல்வபுரம், குமாரபாளையம், அமுல் நகரைச் சேர்ந்த ராஜசேகர் (35) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை செய்ததில் ராஜசேகர் செல்வியின் தாயார் கழுத்தில் கிடந்த 6 கிராம் தங்க தாலியை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து ராஜசேகரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் நகைகளை ஊழியர்கள் திருடுவது அங்கு வரும் நோயாளிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்

Related Articles

Back to top button
Close
Close