எழுவர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம்..! உயர்நீதிமன்றம் அதிருப்தி!
Chennai high court dissatisfied over rajiv convicts case

சென்னை:
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையின் தீர்மானத்துக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இவரது தாயார் அற்புதம்மாள், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பேரறிவாளன் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 90 நாட்கள் பரோலில் வெளியில் வந்துள்ளார். அதனால், சிறை விதிகளின்படி 2 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அவருக்கு மீண்டும் ‘பரோல்’ வழங்க முடியும்”என்று வாதிடப்பட்டது.
மனுதாரர் தரப்பில், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கவர்னரின் பரிசீலனையில் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர்தான் பரோல் வழங்க வேண்டும் என்று அரசு காத்திருக்க தேவையில்லை என்று ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, 90 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் பதவி வகிப்பவர்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தான், அவர்கள் ஒரு முடிவை எடுக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவேண்டும்.
இல்லை திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் மீது எந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர்.இது தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 29-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்
















