ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு!
பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதால் கடை ஊழியர்கள் இதில் முறைகேடில் ஈடுபட முடியாது.
இருப்பினும் சோதனைகள் என்ற பெயரில் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரித்து வருவதாகவும் ஊழியர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியம், பணி நிரந்தரம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை அரசு நிராகரித்தாள் காலவரையின்றி போராட்டம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.