அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேட்டில் உயர்கல்வித்துறை செயலாளருக்கு தொடர்பு!
சென்னை: துணைவேந்தர் நியமிக்கப்படாத 2 ஆண்டுகாலம் அண்ணா பல்கலைக்கழகம் கல்வித்துறைச் செயலாளர் சுனில் பாலிவால் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது உள்ளது.
இந்த காலகட்டத்தில் தான் தேர்வில் முறைகேடு அதிக அளவில் நடந்துள்ளதால், லஞ்சப் பணத்தில் அவருக்கும் பங்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த வழக்கில் முதற்கட்டமாக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட 9 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில் உயர்கல்வித் துறை செயலாளராக பதவி வகித்து வரும் சுனில் பாலிவாளுக்கு தொடர்பு இருக்கக் கூடிய தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகாலம் அதாவது 2016,2017 ஆகிய காலங்களில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது.
அந்த காலகட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்ணயிப்பதற்காக வழிகாட்டு குழு அமைக்கப்பட்டது.
இந்த வழிகாட்டு குழுவிற்கு சுனில் பாலிவால் தான் தலைமை வகித்தார். அவரின் முழு கட்டுப்பாட்டில் தான் அப்பொழுது அண்ணா பல்கலைக்கழகம் இயங்கி வந்தது.
பேராசிரியர் உமா தேர்வு கட்டுப்பாட்டாளராக இருந்ததும், அந்த கால கட்டத்தில் தான். அப்போதுதான் சுமார் 400 கோடி அளவு அளவிற்கு லஞ்சம் கொடி கட்டி பறந்ததாக கூறப்படுகிறது.
அந்த காலகட்டங்களில் சுனில் பாலிவால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கையெழுத்திட வேண்டிய இடங்களில் கையெழுத்திட்டு இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
மாணவர்களின் சான்றிதழில் உயர்கல்வித்துறை செயலாளர் கையெழுத்திட எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் சுனில் பாலிவால் மாணவர்களின் சான்றிதழில் கையொப்பமீட்டு இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில பேராசிரியர் மீது அவர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். குறிப்பாக இந்த இரண்டு ஆண்டு கால கட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுனில் பாலிவால் அதிகாரம் கொடி கட்டி பறந்தது குறிப்பிடத்தக்கது.