சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை ஒரே நாளில் சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு ஓராண்டாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றாதது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திரு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது.
ஆனால் இது தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து வழக்கறிஞர் யானை.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும், சிலை கடத்தலில் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகளை காப்பாற்றும் நோக்கில் இந்த உத்தரவு உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மற்றும் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
மேலும் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு ஒரே நாளில் மாற்றிய நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை, ஒரு நிமிடம் கூட நீடிக்க தகுதியற்ற அரசாணை என்றும், 12 மணி நேரத்தில் ஒரு அரசாணை வெளியிட்ட தமிழக அரசு, மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசாணை வெளியிட தயங்குவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.