fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம்..! முதலமைச்சர் அறிவிப்பு!

Tamilnadu rejects new education policy

சென்னை:

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந் நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தி உள்ளனர்.

1963-ம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3-வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில்தான் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

என்றாலும், 1965-ம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதை எதிர்த்து, மாணவர்களும், மக்களும், தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தினர்.

மக்களிடையே மும்மொழி கொள்கையை பற்றிய கவலைகள் நீங்காததால், அண்ணா, தமிழ்நாடு சட்டசபையில் 1968-ம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதியன்று, “தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் மும்மொழி திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது“ என்று வரலாறு போற்றத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் பாட திட்டத்தில் இருந்து இந்தி மொழி முழுமையாக நீக்கப்பட்டது. அண்ணாவால் தெளிவுற உரைக்கப்பட்ட இரு மொழி கொள்கையை செயல்படுத்துவதுதான் எம்.ஜி.ஆரின் உறுதியான கொள்கையாக இருந்தது. அதன்படியே அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது, 1986-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதியன்று, இரு மொழி கொள்கையை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, “இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம்“ என்று சூளுரைத்தார்.

மேலும், இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார்.

இவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர். இப்படிப்பட்ட மாபெரும் தலைவர்கள் வழிவந்த தமிழக அரசும், மத்திய அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்ட போதே, அதில் மும்மொழி கொள்கை இடம் பெற்றதை சுட்டிக் காட்டி, அதனை தீவிரமாக எதிர்த்தது.

மேலும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இருமொழி கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிபட தெரிவித்து, 2019-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதியன்று பிரதமரை வலியுறுத்தி நான் கடிதம் எழுதினேன்.

இருமொழி கொள்கையையே தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்பதை கடந்த ஆண்டு எனது சுதந்திர தின உரையிலும், சட்டசபையில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின் போதும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்து உள்ளேன்.

தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், தமிழக அரசு இந்த மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அ.தி.மு.க. உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இருமொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக்கொள்ள அனுமதிக்க பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும்போது, அந்த பாதிப்பை களைய உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close