fbpx
Others

‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் வந்த 100 அயலக தமிழர்கள்..

மாமல்லபுரத்திற்கு ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 100 அயலக தமிழர்கள் வருகை புரிந்து புராதன நினைவுச் சின்னங்களை கண்டு ரசித்தும், சிற்பக் கலைக் கல்லூரியை பார்வையிட்டும் மகிழ்ந்தனர். ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 15 வெளி நாடுகளை சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டில் 15 நாட்கள் தங்கி தமிழர்களின் கலாச்சாரப் பெருமைகளை தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அயல் நாடுகளில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழ் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு அழைத்து வரப்பட்டனர்.அவர்கள், தமிழ்நாட்டின் பாரம்பரிய நினைவு சின்னங்கள், நீர் மேலாண்மை, கட்டிடக்கலை, ஆடை மற்றும் ஆபரணங்கள், தமிழறிஞர்களின் கட்டுரைகள், வாழ்வியல் முறைகள் ஆகியவை குறித்து பார்வையிட்டு, அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சுற்றுப்பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு, நாளும் தமிழ்நாடு அரசு மூலம் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

அதன்படி, தென் ஆப்ரிக்கா, மியான்மர், இலங்கை, கனடா, மலேசியா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நேற்று மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டனர். கடற்கரை கோயிலை சுற்றிப் பார்த்து ரசித்தனர். மேலும், கோயிலை செதுக்கிய மன்னர்களின் பெயர்கள், செதுக்கப்பட்ட காலம் உள்ளிட்ட வரலாற்று தகவல்களை சேகரித்தனர். தொடர்ந்து, அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரிக்கு சென்று மாணவர்கள் செதுக்கிய சிற்பங்களை பார்வையிட்டனர்.மேலும், புராதன நினைவுச் சின்னங்களை கண்டு ரசித்தனர்.இதுகுறித்து வெளிநாட்டு தமிழர்கள் கூறுகையில், மாமல்லபுரம் கடற்கரை கோயில் மற்றும் அரசினர் சிற்பக்கலை கல்லூரியை சுற்றிப் பார்த்துமாணவர்களுடன் கலந்துரையாடி வரலாற்று தகவல்களை சேகரித்தோம். மாமல்லபுரத்தின் வரலாறுகளை தெரிந்து கொள்ள ஒரு வருடமே போதாது என நினைக்கிறோம். இங்குள்ள, சிற்பங்கள் கண்ணை கவரும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் இடமாக உள்ளது.அதனால் தான், இங்கு சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. இதனால், அனைத்து நாடுகளின் கவனமும் மாமல்லபுரம் மீது திரும்பி உள்ளது, நாளை(இன்று) வீராணம் ஏரி, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களை பார்வையிட உள்ளோம். வரும், ஆகஸ்ட் 15ம் தேதி வரை தமிழ் நாட்டின் முக்கிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். அனைத்து, இடங்களையும் சுற்றிப் பார்த்த பிறகு எங்கள் நாட்டுக்கு சென்றதும் தமிழர்களின் கலாச்சார வாழ்வியல் முறைகளை எடுத்துக் கூறுவோம், என்று பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close