வி.கார்த்திகேய பாண்டியன் மீண்டும் ஐஏஏஸ் பணி வாய்ப்பு….
ஒடிசா சட்டசபை தேர்தல் தோல்வியால், அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிய தமிழரான விகே பாண்டியன் என்ற வி.கார்த்திகேய பாண்டியன் மீண்டும் ஐஏஏஸ் பணியில் சேர அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், 2000 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த பஞ்சாப் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கார்த்திகேயன் பாண்டியன் தன்னுடன் சிவில் சர்வீசஸ் படித்த சுஜாதா எனும் ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரியை திருமணம் செய்துகொண்டார்.பிறகுவிகேபாண்டியனும்தனதுபணியைஒடிசாவுக்குமாற்றிக்கொண்டார். ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரியாக இந்த விகே பாண்டியன், கடந்த 2011ல் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் தனி செயலாளர் ஆனார். குறுகிய காலத்திலேயே ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவராக மாறினார். அங்கு ஆட்சியில் உள்ள பிஜி ஜனதாளம் கட்சி எம்எல்ஏக்கள் எல்லாம் விகே பாண்டியன் என்ன சொல்கிறாரோ அதன்படியே பணிகளை செய்யும் அளவிற்கு வளர்ந்தார். அரசின் முகமாகவும் அதிகாரத்தின் முகமாகவும் விகே பாண்டியன் ஒரு கட்டத்தில் உருவெடுத்தார். ஒரு கட்டத்தில் ஒடிசா அரசியலில் அதிகார மையமாக மாறினார். ஒடிசா முதல்வர் பங்கேற்கும் அனைத்து முக்கிய கூட்டங்களிலும் கலந்து கொண்டுவந்தார். விகே பாண்டியனை 5T என்று அழைக்கப்படும், குழு வேலை, தொழில் நுட்பம் என ஐந்துதுறைகளின் (Team work, technology, transparency, transformation and time limit) செயலாளராக ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் நியமித்தார். இதன் மூலம் ஒடிசாவின் அனைத்து துறைகளிலும் திட்டத்தையும் மதிப்பாய்வு செய்யவும் கண்காணிக்கவும் தலைமை அதிகாரியானார். விகே பாண்டியன் தான் ஒடிசாவின் நிழல் முதல்வர் போல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வந்தார். எம்எல்ஏக்கள் எம்பிக்கள் யாராக இருந்தாலும் விகே பாண்டியனை மீறி நவீன் பட்நாயக்கிடம் பேச முடியாத அளவிற்கு நிலைமை மாறியது. ஒரு கட்டத்தில் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு விகே பாண்டியன் தான்எனஎதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கின. சுமார் 12 வருடங்கள் அதிகார மையமாக இருந்த விகே பாண்டியன் விருப்ப ஓய்வுபெற்று பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர முடிவு செய்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் ஐஏஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்
வி.கே.பாண்டியன். அவரது விருப்ப ஓய்வை பெறும் மூன்று நாளில் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் தன் விருப்ப ஓய்வை வாபஸ் பெற்று மீண்டும் ஐஏஎஸ் பணியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 24 வருடங்களாக, ஐந்து முறை தொடர்ந்து ஒடிசா முதல்வராக இருந்தவர் நவீன் பட்நாயக்கை, விகே பாண்டியனுக்கு எதிரான பிரச்சாரத்தை வைத்தே பாஜக காலி செய்தது. இதனால் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ஆட்சி, இந்த முறை பறிபோனது. பாஜகதான் ஒடிசாவில் ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இதனிடையே முதல்வர் நவீனுக்கு நெருக்கமாக இருந்த வி.கே.பாண்டியன் தான் தேர்தல் தோல்விக்கு காரணம் என புகார் எழுந்தது. இதை மறுத்து, பாண்டியனுக்கு ஆதரவாக முதல்வர் நவீன் வீடியோ வெளியிட்டார். ஆனால் கட்சியினர் அதனை ஏற்கவில்லை. இதையடுத்து நிரந்தரமாக விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார் வி.கே.பாண்டியன். இதன் மூலம் விகே பாண்டியனின் ஏழு மாத அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே விகே பாண்டியனின் ராஜினாமாவை மத்திய அரசு வெறும் மூன்று தினங்களில் ஏற்றது என்பதால், தனது விருப்ப ஓய்வை வாபஸ் பெறுவதாக மீண்டும் மத்திய அரசுக்கு விகே பாண்டியன் கடிதம் எழுதினால் அவரது விருப்ப ஓய்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரிகள் அதை வாபஸ் பெற்றுள்ளார்கள். அதனை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு மீண்டும் ஐஏஎஸ் பணியில் தொடர அனுமதித்தது. உதாரணமாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஷா பைஸல், கடந்த 2019-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.. தொடர்ந்து ஷா பைஸல், புதிய கட்சியை துவக்கி நடத்தினார். ஆனால் கட்சியை தொடர்ந்து நடத்த விரும்பாத அவர், மனம் மாறி மீண்டும் ஐஏஎஸ் பணியில் தொடர விரும்பினார். இதற்காக, ஷா பைஸல் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 2022-ல் அவரை ஐஏஸ் பணியில் அமர்த்தியது. அதனை தொடர்ந்து ஐஏஎஸ் பொறுப்புக்கு வந்த ஷா பைஸல் தற்போது அயல் பணியாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரியாக இருக்கிறார். அவரை போலவே பாண்டியனும் தன் விருப்ப ஓய்வை ரத்து செய்து ஐஏஎஸ் பணியில் தொடருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 23 ஆண்டு ஒடிசா அரசு பணியில் பல துறைகளில் சூப்பராக செயல்பட்டு பெயர் எடுத்த பாண்டியன் மீண்டும் ஐஏஎஸ் பணியில் தொடர விரும்பி கடிதம் எழுதினால் மத்திய அரசு ஏற்க வாய்ப்பு உள்ளதாம்.எனவே விகே பாண்டியன் விரைவில் கடிதம் எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே விகே பாண்டியனின் மனைவியான சுஜாதா ஒடிசாவில் தம் சொந்த மாநில ஐஏஎஸ் பணியில் தொடர்கிறார். தற்போது, குழந்தை பராமரிப்பின் கீழ் 6 மாத விடுப்பில் சென்றுள்ளார்.