ரயில்வே-ஆந்திரா ரயில் விபத்துக்கு மனித தவறே காரணம்…?
ஆந்திராவில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. ரயில்வே அதிகாரிகளின் விசாரணையில் மனித தவறே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. பாசஞ்சர் ரயிலின் டிரைவர் சிக்னலை கவனிக்காததால் விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா ரயில் நிலையம் நோக்கி செல்லும் பயணிகள் ரயில் நேற்று முன்தினம் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு செல்லும் ராயகடா பாசஞ்சர் ரயில் 15 நிமிட இடைவெளியில் 6 மணிக்கு புறப்பட்டது. பலாசா பாசஞ்சர் ரயில் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி- அலமண்டா இடையே பீமாலி கிராமத்தில் சிக்னலுக்காக காத்திருந்து மெதுவாகபுறப்பட்டது. இந்நிலையில் பின்னால் வந்த ராயகடா ரயில் பலாசா ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் ராயகடா ரயிலில் இருந்த 3 பெட்டிகளும், பலாசா ரயிலில் 2 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கவிழ்ந்தது. அதேநேரத்தில் ரயில் பெட்டிகள் கவிழ்ந்த தண்டவாளத்தில் விஜயநகரத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆயில் டேங்கர் ரயில் பெட்டிகளில் மோதியது. இந்த விபத்தில் 19 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவில் 8 பேரின் சடலம் மட்டுமே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது. விபத்தில் ராயகடா ரயிலின் லோகோ பைலட் எம்.எஸ்.எஸ்.ராவ், பலாசா ரயிலின் கடைசி பெட்டியில் இருந்த ரயில்வே கார்டு மற்றும் பயணிகள் 11 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், படுகாயத்துடன் மீட்கப்பட்ட 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் இரவும், பகலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் விஜயநகரம் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.மேலும் அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக ஹெலிகாப்டரில் பறந்தபடி விபத்து நடந்த பகுதியில் உருக்குலைந்து கிடந்த ரயில்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விஜயநகரம் அரசு மருத்துவமனை முன்பு விபத்து குறித்து அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த விபத்து காட்சிகளை விவரிக்கும் படங்களை பார்வையிட்டு விபத்து நடந்த விதம் குறித்து கேட்டறிந்தார். மேலும் ரயில் விபத்தில் இறந்த ஆந்திர மாநிலத்தினை சேர்ந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் வழங்க வேண்டும்.மேலும் காயம் அடைந்தவர்கள் குணமடைய ஒரு மாதத்திற்கு மேல் எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு ரூ.5 லட்சமும், ஒரு மாதத்திற்குள் குணமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதோடு விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் விபத்து குறித்து விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டார்.
இந்த ரயில் விபத்துக்கு காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புபடை , தேசிய பேரிடர், மாநில பேரிடர் மற்றும் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மனித தவறே விபத்துக்கு காரணம் என்றுதெரியவந்துள்ளது கண்டகப்பள்ளி- அலமண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 2 தானியங்கி சிக்னல்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இது போன்ற காலகட்டங்களில், அந்த சிக்னல்களில் 2 நிமிடம் நின்று பிறகு மணிக்கு 10 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க வேண்டும். இந்த நடைமுறையை பலாசா ரயிலின் டிரைவர் சரியாக பின்பற்றி உள்ளார். சிக்னலில் நின்று, பின்னர் மெதுவாக ரயிலை இயக்கி உள்ளார். ஆனால், ராயகடா ரயிலின் டிரைவர் இந்த விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை. சிக்னலை சரியாக கவனிக்காமல் வேகமாக ரயிலை இயக்கியதால்தான் இந்த விபத்து நடந்துள்ளது. இதற்கு டிரைவர் ராவ் மற்றும் உதவி டிரைவர்தான் காரணம் என்று ரயில்வே துறை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஜின் டிரைவர் ராவ் விபத்தில் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. * 19 மணிநேரம் சீரமைப்பு பணியால் 47 ரயில்கள் ரத்து
விஜயநகரம் மாவட்டத்தில் ரயில் விபத்து நடந்த பகுதியில் இரவும், பகலுமாக மீட்பு பணிகள் நடைபெற்றது. இதனால் அந்த வழியாக செல்லும் 47 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 19 மணி நேரம் நடந்த மீட்பு பணிக்கு பிறகு அந்த பாதையில் ரயில் போக்குவரத்து சீரானது.