மருந்துவிலை நிர்ணயம்—உச்ச நீதிமன்றம் அதிருப்தி…..
மருந்துகளின் விலை நிர்ணயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த 12ல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலையில் வணிக லாப வரம்பை 30 சதவீதமாக நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு பதில் அளித்தது.இது திருப்தி அளிக்கவில்லை என கூறிய உச்ச நீதிமன்றம், ‘ஏனைய மருந்துகளுக்கும் ஏன் இதே போன்று வணிக லாப வரம்பை நிர்ணயிக்க முடியாதா?’ என, கேள்வி எழுப்பி இருந்தது. புற்றுநோய் மருந்துகளுக்கு வணிக லாப வரம்பை 30 சதவீதமாக கட்டுப்படுத்த எடுத்த முடிவால், நோயாளிகளுக்கு ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் வரை மிச்சமாகும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.மருந்துகளுக்கான எம்.ஆர்.பி., விலைக்கும், மருந்து கடைகளுக்கு அவை விற்பனை செய்யப்படும் விலைக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக ஒட்டுமொத்த மருத்துவ துறையும் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.ஒட்டுமொத்த நடைமுறையும் மருந்து உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் செயல்படுவது ஏன்? தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் முற்றிலும் செயலற்ற அமைப்பாக இருப்பது போல தோன்றுகிறது. இப்படியொரு நிலைமையை அரசே அனுமதிக்கிறது. அரசின் கண் எதிரிலேயே இப்படி நடக்கிறது. இதை எப்படி அனுமதிக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல்சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி, ”உலகிலேயே நம் நாட்டில் தான் மருந்துகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன,” என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.