மத்திய அரசு –இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகநுழையும் வெளிநாட்டவருக்கு 5 ஆண்டு சிறை..
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.வங்கதேசம், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தங்கி விடுகின்றனர். அத்துடன் அவர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உட்பட இந்தியர்களுக்கான அனைத்து ஆவணங்களையும் போலி ஆவணங்கள் மூலம் பெற்று வருகின்றனர். இதனால் உள்நாட்டில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வெளிநாட்டவர்களை கண்டறிந்து அவர்களை திரும்ப அனுப்பி வருகிறது.இந்நிலையில், பாஸ்போர்ட், விசா அல்லது செல்லத்தக்க ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைபவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர், போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவில் இருந்து வெளியேறும் வெளிநாட்டவர்களுக்கு 2 ஆண்டுக்கு குறையாத சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த தண்டனை 7 ஆண்டுகள் வரையும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் பரிசீலனை செய்யப்படுகிறது.தற்போது வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைய 4 சட்டங்கள் உள்ளன. வெளிநாட்டவர்கள் சட்டம் – 1946, பாஸ்போர்ட் (இந்தியாவுக்குள் நுழைவதற்கு) சட்டம் – 1920, வெளிநாட்டவர்கள் பதிவு சட்டம் 1939, குடியேற்ற சட்டம் 2000 ஆகிய 4 சட்டங்கள் அமலில் உள்ளன. இந்த சட்டங்களுக்குப் பதில் ஒருங்கிணைந்த ‘குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025’ மசோதாவை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்.ளது.தற்போதுள்ள சட்டத்தின்படி பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டினருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்குள் நுழைப்வர்களுக்கு அதிகபட்ச தண்டனை 8 ஆண்டு சிறையும் ரூ.50,000 அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டவர் யார் சேர்ந்தாலும், அவர்களைப் பற்றிய முழு தகவல்களை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றுபுதிய மசோதாவில் இடம்பெற உள்ளது. இதேபோல் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம், மற்ற மருத்துவ நிறுவனங்களில் சேரும் வெளிநாட்டவர் பற்றியும் தகவல்கள் அளிக்க இந்த புதிய மசோதாவில் வழிவகை செய்யப்படுகிறது.விசா காலம் முடிந்த பிறகு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.3 லட்சம் அல்லது இரண்டும் விதிக்கும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. செல்லத்தக்க பாஸ்போர்ட், பயண ஆவணங்கள், விசா போன்றவை இல்லாமல் வெளிநாட்டவரை அழைத்து வரும் விமானம், கப்பல், மற்ற வாகனங்களுக்கு குடியேற்றத் துறை அதிகாரி ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிப்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.