fbpx
Others

புதுச்சேரி ஆளுநராக கைலாஷ்நாதன் பதவியேற்பு….

புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் இன்று பதவியேற்றார். பதவியேற்றதும் முதியோர் உதவித்தொகை கோப்பில் முதலில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார்.யூனியன் பிரதேசமான புதுவையில் துணைநிலை ஆளுநரே நிர்வாகியாக அழைக்கப்படுகிறார். ஆளுநரின் அனுமதி பெற்றே அரசின் அனைத்து செயல்பாடுகளும் நடக்கிறது. அதேசமயம், 2021ம் ஆண்டுக்குப் பிறகு புதுவைக்கு மட்டுமான தனி ஆளுநர் நியமிக்கப்படவில்லை. தனி ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கத்துக்கு பிறகு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை புதுவையின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டார்.இவர் சுமார் 3 ஆண்டுகள் ஆளுநராக பதவி வகித்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழிசை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுவை பொறுப்பு ஆளுநர் பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது. இதனால் சுமார் மூன்றரை ஆண்டுக்கும் மேலாக புதுவைக்கு தனி ஆளுநர் இல்லாமல் பொறுப்பு ஆளுநர்களே பதவிவகித்து வந்தனர்.

இந்த நிலையில், புதுவையின் பொறுப்பு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து புதுவையின் புதிய ஆளுநராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாஷ்நாதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்தார். இவர் குஜராத் கேடர். தனது பணிக் காலத்தில் அங்கே முழுமையாக பணிபுரிந்தார். பின்னர் மோடிக்கு நெருக்கமாகி குஜராத் முதல்வர் அலுவலகத்தில் தனிபொறுப்பு இவருக்கு தரப்பட்டு அங்கு மட்டும் 18 ஆண்டுகள் பணியில் இருந்துள்ளார். கடந்த ஜூனில் இவர் விருப்ப ஓய்வுபெற்ற நிலையில் புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.அதைத்தொடர்ந்து இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தலைமைச் செயலாளர் சரத்சவுகான், புதிய ஆளுநராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டதற்கான குடியரசுத் தலைவரின் உத்தரவை வாசித்தார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், புதிய துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.அதையடுத்து முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணக்குமார், எதிர்கட்சித் தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அதிமுக மாநிலச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அரசுச் செயலர்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் நேரில் புதிய ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு தங்களது வாழ்த்துகளை கூறினர்.அதைத்தொடர்ந்து தனது அறைக்குச் சென்ற ஆளுநர், முதியோர் உதவித்தொகை தொடர்பான கோப்பில் முதல் கையெழுத்திட்டு தனது ஆளுநர் பணியை தொடங்கினார். பின்னர் விருந்தினர்களுடன் ஆளுநர் கைலாஷ்நாதன் தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

 

Related Articles

Back to top button
Close
Close