கொரோனா பாதிப்பு…! நாமே தீர்வு…! புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்!
Kamal haasan announces new movement

சென்னை:
சென்னையில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக தன்னார்வலர்களை ஒன்று சேர்க்க புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சில நாட்களாக நாளொன்றுக்கு 1000க்கும் அதிகமான பாதிப்புகளை சென்னை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பரவலை குறைப்பதற்காக தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க நாமே தீர்வு என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
இதன் மூலம் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குதல், வீடுகளில் இருக்க அறிவுறுத்தல், மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு தேவையான உதவிகள் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க நாமே தீர்வு மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.















