தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம்..
நாள் : 09.08.2024 வெள்ளி கிழமை
இடம் : தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கச் செல்லும் அரசு அலுவலர்கள் மீது கொலை மிரட்டல், அச்சுறுத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக கொடுக்கப்படும் புகார் மனுக்கள் மீது காவல்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்து முறையான விசாரணை, மேல் நடவடிக்கையும் எடுப்பதே இல்லை.முழுக்க முழுக்க அரசியல் அழுத்தத்தின் காரணமாகவும், கனிமவள கொள்ளை கும்பலுக்கு அரசு அதிகாரிகளின் ஆதரவு போக்கின் காரணமாகவும் – சட்டவிரோத கனிமவளக் கொள்ளை பல கோடி அளவில் நடந்தாலும் அதனை மூடி மறைத்து அது தொடர்பாக கொடுக்கப்படும் புகார்களையும் மூடி மறைத்து அதன் மீது நடவடிக்கை எடுக்க செல்லும் அலுவலர்களையும் அழித்து ஒழிக்க நினைக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது.சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை அச்சுறுத்தும் அரசியல் அழுத்தத்தையும், கனிமவள கொள்ளை கும்பலையும் அடியோடு அப்புறப்படுத்த வலியுறுத்தி 1.) ஏற்கனவே சிவசக்தி என்ற கனிமத்துறை வருவாய் ஆய்வாளர் மீது ஆளும் அமைச்சர் உதவியாளர் மற்றும் ஆளும் கட்சியினரால் நடத்தப்பட்ட கொலை மிரட்டல், அச்சுறுத்தல் தொடர்பாக குண்டடம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனு மீது காவல் துறை தரப்பில் எந்த ஒரு முறையான விசாரணையும் செய்யவில்லை, இன்று வரை வழக்கும் பதிவு செய்யவில்லை. 2.) அதனைத் தொடர்ந்து தற்பொழுது சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கச் சென்ற தாராபுரம் வட்டாட்சியர் அவர்களுக்கு கொலை மிரட்டல், அச்சுறுத்தல் நடைபெற்றது. ஆளும் கட்சி தரப்பில் வழக்கு பதிய கூடாது என்று கடும் அழுத்தம் இருந்து வருகிறது. அதன் மீதும் குண்டடம் காவல்துறை தரப்பில் முறையான வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை. முழுக்க முழுக்க தாராபுரம் பகுதியில் காவல்துறை என்பது கடுமையான அரசியல் அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறது. சட்ட விரோத செயல்பாட்டிற்கு உடந்தையாக இருக்கிறது. வருவாய்த்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்க செல்லும்போது கூட குறைந்தபட்ச பாதுகாப்பு கூட இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் இந்த பகுதியில் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பாக புகார் கொடுக்கும் சாதாரண மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, அரசு அலுவலர்களுக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலை நிலவுகிறது.இதனைஎல்லாம்தெரிந்துகொண்டிருக்கும் அரசு நிர்வாகம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் கடமை தவறி இருக்கிறது. ஆகவே கடமை தவறிய அரசு பணியாளர்களின் கடமையை ஆற்றக்கோரி, கடமை தவறி வரும் அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க கோரியும் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல், கனிமவள கொள்ளை தொடர்பாக தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் முழுமையான ஆய்வு மேற்கொண்டு கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோத கனிம வள கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து வரும் குண்டடம் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது என தமிழக விவசாயம் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளனர்.