சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
சென்னை முன்னாள் மேயரும், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான சைதை துரைசாமியின் மகனும், இயக்குனருமான வெற்றி துரைசாமியின்(Vetri Duraisamy) உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று இருந்த போது, அவர் பயணித்த கார் கடந்த வாரம் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவரது ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெற்றி மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில், விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பாறையின் அடியில் உடல் சிக்கியிருந்த நிலையில், மீட்பு படை வீரர்கள் அவரது உடலை கண்டுள்ளனர். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு வெற்றியின் உடைகள் இருந்த பெட்டி போன்றவை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் வெற்றியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக தனது மகன் தொடர்பாக தகவல் தெரிப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, சைதை துரைசாமி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.விபத்து நேர்ந்தது எப்படி? சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகனுன், இயக்குனருமான வெற்றி துரைசாமி, தனது புதிய படம் தொடர்பான பணிக்காக இமாச்சலபிரதேசம் சென்றிருந்தார். அவரது நண்பர் கோபிநாத் என்பவரும் உடன் சென்றிருந்தார். உள்ளூரான காஜா பகுதியை சேர்ந்த ஓட்டுனர் டென்ஜின் என்பவரின் உதவியுடன், இன்னோவா காரில் வெற்றி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டென்ஜினுக்கு மாரடைப்பு ஏற்பட கார் கட்டுப்பாட்டை இழந்து, கின்னவுர் பகுதியில் சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை இயக்கிய ஓட்டுநர் டென்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபிநாத் படுகாயமடைந்த நிலையில், விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது .ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் தொடர் மழை காரணமாக மீட்பு பணியில் சிக்கல் நீடித்தது. தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 600-க்கும் மேற்பட்ட சாலைகள், கடந்த வாரம் மூடப்பட்டன. இதன் காரணமாக மீட்பு பணிகளை மேற்கொள்வதில் மீட்பு படையினருக்கும், போலீசாருக்கும் சவாலான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.