கேள்விக்குறியாகும் அரசாணை நிலை எண் 150 ..?
கேள்விக்குறியாகும் தமிழ்வளர்ச்சி (ம) பண்பாட்டுத்துறையின் அரசாணை நிலை எண் 150
“எங்கும் தமிழ் – எதிலும் தமிழ்” என்ற கொள்கையின் உயிர் மூச்சாக கொண்டு 1996 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி தமிழகத்தில் ஊர்ப் பெயர்கள், மக்களின் பெயர்கள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர்கள் தமிழில் இருக்கவேண்டுமென்று பெரியதோர் முயற்சியை தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாட்டுத்துறை மூலம் மேற்கொண்டார். இந்த முயற்ச்சியில் எல்லாமே தனித் தமிழாக இருக்க வேண்டுமென்றும் கட்டாயமான திணிப்புக்கு இடமில்லாமல் தமிழில் அமைந்திட அனைத்துநடவடிக்கைகளையும் முனைப்புடன் எடுக்கப்பட்டது. அதில் ஒரு படியாக வணிக நிறுவனங்கள் பெயர்ப்பலகைகளில் சரியான தமிழ்ச்சொற்களை இடம் பெறச் செய்ய 19-12-1990 ஆம் நாளிட்ட தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை நிலையாணை எண் 291 இல் அரசு குழு ஒன்றை அமைத்தது. அதை தொடர்ந்து தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறைச் செயலாளர் அவர்களை அமைப்பாளராகவும், முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன், பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு 16-07-1996 ஆம் அமைக்கப்பட்டது. அதன் படி அக்குழு கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் முதலியவற்றில் சரியான தமிழ்ச்சொற்களில் பெயர்பலகைகளில் எழுதிவைத்தல் தெடர்பாக 515 தமிழ்சொற்களை இந்த அறிஞர் குழு வெளியிட்டது. எடுத்துக்காட்டாக ஒரு கடையின் பெயர் “ஜெயம் சில்க் ஹவுஸ்” என்று இருக்குமாயின் அதற்கு சரியான தமிழ்ச்சொல் “ஜெயம் பட்டு மாளிகை” என்பது சரியாக இருக்கும். நாளடைவில் இக்குழு புத்தாக்கம் பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது தற்போதைய தமிழ்வளர்ச்சித்துறையிடம் கேட்டு அறியப்பட்டது. தமிழுக்கான ஆட்சி என்று சொல்லும் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் போது கொண்டுவந்த தமிழ்வளர்ச்சி (ம) பண்பாட்டுத்துறையின் அரசாணையை முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க முனைப்புக்காட்ட வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இங்ஙனம் க.அஜித் குமார்
தமிழ் வளர்ச்சி இயக்கம்
கோவை.