கேசரப்பள்ளி என்ற பகுதியில் சிறப்பு பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா…
ஆந்திர அரசில் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பாஜகவிற்கும் ஒரு இடத்தை சந்திரபாபு நாயுடு ஒதுக்கியுள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்து வந்தார். லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைத்து களமிறங்கியது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியுடன் போட்டியிட்டது. தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணியில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கட்சிகள் இணைந்தன. மொத்தம் உள்ள 175 சட்டசபை தொகுதிகளில் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. மாறாக ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆந்திராவில் ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை இருந்தும் சந்திரபாபு நாயுடு கூட்டணி ஆட்சி அமைத்தார். இதையடுத்து கடந்த 12ஆம் தேதி விஜயவாடா விமான நிலையம் அருகே இருக்கும் கேசரப்பள்ளி என்ற பகுதியில் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ பி நட்டா, உள்ளிட்டோரும் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா
, ராம்சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆந்திராவின் முதலமைச்சர் ஆக சந்திரபாபு நாயுடு பதவியேற்று கொண்டார். அவருடன் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். இந்த நிலையில் தற்போது அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி ஆந்திர அரசில் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பாஜகவிற்கும் ஒரு இடத்தை சந்திரபாபு நாயுடு ஒதுக்கியுள்ளார். பாஜகவை சேர்ந்த சத்ய குமார் யாதவ் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை & மருத்துவ கல்வி ஆகிய துறைகளை சந்திரபாபு நாயுடு ஒதுக்கியுள்ளார். சத்யகுமார் யாதவை பொறுத்தவரை தர்மாவரம் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சத்ய குமார் யாதவ், பாஜகவில் தேசிய செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தீவிர ஆதரவாளராக இவர் அறியப்படுகிறார்.