காசாவில் மக்கள் அசுத்த நீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம்
காசாவில் அசுத்தமான நீரை குடிக்க வேண்டிய நிலைக்கு மக்கள்தள்ளப் பட்டுள்ளதால், நீரினால்பரவும்நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதாரநிறுவனம்எச்சரித்துள்ளது.ஹமாஸ் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அதோடு, காசாவுக்கு வழங்கி வந்த குடிநீர், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றையும் நிறுத்தி உள்ளது. இதனால், காசாவில் வசிக்கும் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மின்சார விநியோகம் இல்லாததால் இரவு நேரம் வெளிச்சமின்றி இருட்டாக உள்ளது. அத்தியாவசிய மின்சார தேவைக்கான எரிபொருள் இல்லாததால் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதோடு, காசாவுக்கு விநியோகித்து வந்த குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். வேறு வழியின்றி அசுத்தமான நீரை குடிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அசுத்தமான நீரை குடிப்பதால், நீரினால் பரவும் நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ், “சுத்தமான குடிநீர் இல்லாதது மிகப் பெரிய உடனடி அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அசுத்தமான நீரை குடிப்பதால் நீரினால் பரவும் நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளது. சுத்தமான நீரை பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத மக்கள் மத்தியில் இது ஆபத்தை ஏற்படுத்திவிடும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.காசாவுக்கு குடிநீர் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்தி மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அகதிகளுக்கான ஐநா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், 24 மணி நேரத்துக்குள் காசா நகரில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவு மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதோடு, காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.இரு தரப்பிலும் இதுவரை 3,000-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே விரைவாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட தேவையான மத்தியஸ்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஐநா அமைப்பு வலியுறுத்தி உள்ளது.