அன்புமணி–கேடுகளுக்கு வழிவகுக்கும் கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட…
கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: கொடுங்கையூரில் 342 ஏக்கரில் குப்பைக் கொட்டும் வளாகம் உள்ளது. அங்கு குப்பையை உயிரி அகழ்ந்தெடுத்தல் திட்டத்தின் மூலம் அகற்றி, நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ரூ.640 கோடியில் சென்னை மாநகராட்சி செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மீட்டெடுக்கப்படும் சுமார் 250 ஏக்கர் நிலம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படும் என்பதாலும், இனி வரும் காலங்களில் அப்பகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், நோய்பரவும் வாய்ப்புகளும் குறையும். அதேநேரத்தில், அதே குப்பை கொட்டும் வளாகத்தில் இனி புதிதாக சேரும் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரூ.1026 கோடியில், 75 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, குப்பை எரிப்பதற்கான எரிஉலை நிறுவப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பையும் ஒன்றாக எரிக்கப்படும். அதனால், டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு மற்றும் பியூரன் உள்ளிட்டவை வெளியாகும். மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களிலேயே மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது எரிஉலை தான். எனவே, இந்த எரிஉலை திட்டத்தை மாநகராட்சி முற்றிலுமாக கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக, சுழிய குப்பை எனப்படும் குப்பையில்லா சென்னை கோட்பாட்டை விரைந்து செயல்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.