fbpx
HealthTamil News

பாத வெடிப்புகள் குணமாக என்ன செய்யலாம்?

ஆரோக்கியமான கால்களே அழகான கால்கள். கால்களை நன்கு பராமரித்தால் தான் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, கால் பாதங்களை சுத்தமாகவும், சரியான முறையிலும் பராமரிப்பது அவசியம். பாத வெடிப்பை சரி செய்ய சில எளிய வழிமுறைகளை செய்தாலே போதும்.

நம் உடலில் பித்தம் அதிகமாகும் போது உடல் சூடு அதிகரிக்கும். அதனால் பாதங்கள் ஈரப்பதம் குறைந்து வறண்டுபோய் அந்த இடத்தில் வெடிப்புகள் உண்டாகும். அதனை பித்த வெடிப்பு என்கிறோம். பொதுவாக, எல்லாருக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம். ஆனால், ஆண்களை விட பெண்களுக்கு தோல் மென்மையாக இருப்பதால் பெண்களுக்கு இந்த தொல்லை அதிகமாக இருக்கும்.

உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், கால்களில் அழுத்தம் அதிகரித்து பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.

அதிகமான நேரம் நின்று கொண்டே இருக்க வேண்டிய வேலை செய்பவர்கள், சதா அலைந்து திரியும் அதாவது நிறைய நேரம் நடக்க வேண்டி இருக்கும் வேலை பார்ப்பவர்கள் போன்றவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படும்.

செருப்பே அணியாமல் இருப்பவர்களுக்கும், சரியான செருப்பை அணியாமல் இருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம். பொதுவாக, இளம் வயதினரைக் காட்டிலும் முப்பது வயது தாண்டியவர்களை இது அதிகம் பாதிக்கும். 30 வயதிற்குப் பின் சருமம் ஈரப்பதம் குறைந்துபோகும். அதனால் வறட்சியின் காரணமாக வெடிப்புகள் ஏற்படலாம்.

பித்த வெடிப்பு ஏற்படாமல் இருக்க பாதங்களை பராமரிப்பதிலும் கவனம் தேவை. குளிக்கும்போது கால் பாதங்களையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும். ஃபுட் பிரஷ் அல்லது ஸ்க்ரப்பர் கொண்டு பாதங்களை தேய்க்கும் போது உலர்ந்த செல்கள் உதிர்ந்து அங்கே புது செல்கள் உருவாகும்.

இரவில் வெந்நீரில் கல் உப்பு, எலுமிச்சைச்சாறு, தேன் போன்றவற்றை சேர்த்து அந்த நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். எலுமிச்சை சுத்தப்படுத்தும் இயல்புடையது என்பதால் பாதங்களில் உள்ள அழுக்குகளை வெளியேற்றிவிடும். உப்பு நோய்த்தொற்றுகளை தடுக்கும். கிருமிகளைக் கொல்லும். தேன் காயங்களை குணப்படுத்தும் தன்மை உடையது. எனவே, பாத வெடிப்புகள் குறையும்.

பாதங்களின் சருமம் வறண்டு விடாமல் இருக்க, சுத்தப்படுத்திய பாதங்களை துடைத்துவிட்டு பாதங்களில் சோற்றுக்கற்றாழையின் ஜெல் எடுத்து தடவ வேண்டும்.

பாதங்களின் ஈரப்பதத்தை பாதுகாக்க வீட்டில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

கிளிஞ்சல் மெழுகு என்றொரு மருந்து நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். அதனை விளக்கெண்ணெயுடன் கலந்து தடவலாம்.

நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு நாம் அனைவரும் வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுப்பது உடல் சூட்டினை குறைக்கும். அத்தோடு உடலின் ஈரப்பதமும் பாதுகாக்கப்படும். பாதங்களின் ஈரப்பதத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பான காலணிகளை அணிவதும் மிக அவசியம்.

Related Articles

Back to top button
Close
Close