த.வெ.க100 அடி கொடிக் கம்பம் சாயும் சாய்ந்து விழுந்ததில் கார் நொறுங்கியது…
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் திடலில் அமைக்கப்பட இருந்த 100 அடி உயர கொடிக் கம்பம் விழுந்ததில் கார் நொறுங்கியது. அந்த இடத்தில் கான்கிரீட் சேதமடைந்துள்ளதால் நாளைக்குள் மீண்டும் அங்கே அந்தக் கொடிக் கம்பத்தை நிறுவுவது கடினம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. சுமார் 500 ஏக்கரில் மாநாட்டு திடல், 2 பார்க்கிங் இடங்கள், ஒன்றரை லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள் என ஏராளமான வசதிகளை அக்கட்சி மேலாண்மை குழு ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், மாநாட்டின் தொடக்கமாக மாநாட்டு திடலுக்குள் நுழையும் போது கட்சி கொடியை ஏற்றி வைத்து விட்டு, அதன்பிறகே தலைவர் விஜய் மேடைக்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டது. அதற்காக 100 அடி கொடிக் கம்பத்தை நடும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. ராட்சத கிரேன் மூலம் கொடிக்கம்பம் நடப்பட்டபோது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிவேகமாக சாய்ந்த அந்த பிரம்மாண்ட கொடிக்கம்பம் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இன்னோவா காரின் மீது விழுந்ததால் கார் கண்ணாடிகள் உடைந்து உருக்குலைந்தது. இதையடுத்து கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. நல்வாய்ப்பாக அந்த காரில் யாரும் இல்லாத நிலையில், பெரும்
விபத்து தவிர்க்கப்பட்டது. 100 அடி கொடிக் கம்பம் சாயும் போது அருகிலிருந்த தவெகவினர் சிதறி ஓடியதால் தப்பித்துக் கொண்டனர்.கொடிகம்பத்தை நிலைநிறுத்தும் போல்ட்டுகளை சரியாக பொருத்தாததால் சாய்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததும், கொடிக் கம்பம் வேகமாக சாய்ந்து விழக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மீட்பு பணிகள் நடைபெற்றன.கொடிக் கம்பம் வைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் கான்கிரீட் போடப்பட்டிருந்தது. அது கொடிக் கம்பம் சாய்ந்ததால் சேதமடைந்துள்ளது. அது தற்போது வரை செய்யப்படவில்லை. எனவே சரிசெய்து எப்படி கொடிக் கம்பத்தை மீண்டும் நடப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் அவசரமாக கொடிக் கம்பத்தை நடுவது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால், கொடி ஏற்றுவதற்கு வேறு ஏற்பாடுகள் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.