நட்சத்திர காவல் விருது : காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளுநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் அவர்களது தலைமையிலான குழு ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு “மாதத்தின் நட்சத்திர காவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாதமும் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் காவல் அலுவலருக்கு ரூ.5,000 பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் J.லோகநாதன், இ.கா.ப. அவர்களின் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து, கடந்த ஆகஸ்ட்-2022 மாதத்தில் சிறப்பாகவும், மெச்சத்தக்க வகையிலும் பணியாற்றியமைக்காக மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் B.பாஸ்கரன், என்பவரை “ஆகஸ்ட் மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு” தேர்வு செய்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் B.பாஸ்கரன், என்பவரை நேற்று (20.09.2022) நேரில் அழைத்து ஆகஸ்ட் மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்குரிய ரூ.5 ஆயிரம் பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் B.பாஸ்கரன், லோன் தருவதாக செல்போன் செயலி மூலம் பணம் பறித்து மோசடி செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட 1.தீபக் குமார் பாண்டே, வ/26, 2.ஜித்தேந்தர் தன்வர், 3.நிஷா, 22, 4.பிரகாஷ் சர்மா, வ/21 ஆகிய 4 நபர்களை உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானாவிற்கு சென்று கைது செய்ய பெரிதும் உதவியாக இருந்து மெச்சத்தக்க வகையில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களில் வருகிற 21.09.2022 மற்றும் 26.09.2022 வரையிலான தேதிகளில் பிறந்தநாள் காணும் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) கபில்குமார் சி. சரட்கர், இ.கா.ப., 32 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்களை நேரில் அழைத்து வாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை வழங்கி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
