146 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை….?
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், இன்ஜி., கல்லுாரிகளுக்கான நடப்பு கல்வியாண்டு கலந்தாய்வு, கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் சுற்று கலந்தாய்வு முடிவில், கலந்தாய்வில் பங்கேற்ற மொத்த கல்லுாரிகளில், 146 கல்லுாரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.அதேநேரம், 6 அரசு கல்லுாரிகள் உட்பட 200க்கும் அதிகமான கல்லுாரிகளில், ஒற்றை இலக்கத்தில், ஒவ்வொரு துறைகளிலும், மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. மேலும், 23 கல்லுாரிகளில் 60 சதவீதம் வரை, 32 கல்லுாரிகளில் 40 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.மாணவர்கள், சி.இ.ஜி., – எம்.ஐ.டி., கோவை சி.ஐ.டி., – பி.எஸ்.ஜி., – ஏ.சி.டெக் ஆகிய கல்லுாரிகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காண்பித்தனர். முதல் சுற்று கலந்தாய்வில், மாணவர்களின் பிரதான தேர்வாக, பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பு இருந்தது.அதேநேரம், சிவில், ஏரோநாட்டிகல், கெமிக்கல், பயோ டெக்னாலஜி, செராமிக், பெட்ரோலியம், ஜவுளி, பேஷன், லேதர் துறை சார்ந்த இன்ஜினியரிங் படிப்புகளின் மவுசு குறைந்தது. 20 பாடப்பிரிவுகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.தரவரிசையில், 200க்கு 200 ‘கட் ஆப்’ மதிப்பெண்கள் பெற்ற 52 மாணவர்களில், 38 பேர் மட்டுமே, முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை பெற்றுள்ளனர். 200க்கு 195 கட் ஆப் மதிப்பெண் பெற்ற 2,151 மாணவர்களில், 1,506 பேர் மட்டுமே இடங்களை பெற்றுள்ளனர். மற்றவர்கள், நிகர்நிலை பல்கலை, மருத்துவம் செல்ல ஆர்வம் காண்பித்துள்ளனர். மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவில், சுமார் 40,000 பி.இ., – பி.டெக்., இடங்கள் காலியாக வாய்ப்புள்ளது.