செங்குன்றம் பேரூந்து நிலையத்தில் விஜய்பிரபு எம்.எல்.ஏ ஆய்வு…

மாதவரம் தொகுதி செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சியில் பழமை வாய்ந்த அண்ணா பேரூந்து நிலையத்தை கடந்த திமுக ஆட்சியில் செங்குன்றம் பேரூராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி 50 இலட்சம் மதிப்பீட்டிலும், பேரூராட்சி சார்பில் கூடுதல் நிதியாக ரூ. 50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்தப் பேரூந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல். விஜய் பிரபு நேரில் ஆய்வு செய்தார்.பேரூந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளனவா? கழிப்பறையில் தண்ணீர் வசதி, கழிப்பறையின் தரம் உள்ளிட்டவைகளையும், பேருந்து நிலையத்தின் மேற்கூரை, பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓய்வு அறை, பேரூந்து நிலையத்தின் சுற்றுச்சுவர்கள் தரமாக உள்ளனவா? வணிகப் பயன்பாட்டிற்காக 20க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன.அந்தக் கடைகளின் வசதிகள் உள்ளிட்டவைகளை குறித்தும் ஆய்வு செய்தார். அப்பொழுது பேரரூந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகள் சட்டமன்ற உறுப்பினர் விஜய் பிரபுவை சந்தித்து நடைபாதைக் கடைகளை அகற்றக் கூடாது என்றும், வியாபாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.இதனைத் தொடர்ந்து புழல் – செங்குன்றம் ஏரிக் கரையின் ஓரத்தில் பொதுமக்கள் நடைபயிற்சிமேற்கொள்வதற்காக ரூ 16 கோடியில் கட்டப்பட்டு வரும் நடைபாதை பணிகளையும், பூங்காவையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, செங்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், தமிழக வெற்றிக் கழகம் மாவட்டப் பொருளாளர் டி.சி.எம். மனோஜ், செங்குன்றம் நகரச் செயலாளர் கே.விஜி, இணைச் செயலாளர் பைரவா வினோத், பொருளாளர் எம்.சுரேஷ், துணைச் செயலாளர் ஜெ.காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
